Saturday, March 28, 2009

விதுர நீதி


அறிவுள்ளவனின் குணங்கள்

"எவனுடைய கல்வி, அவன் புத்தியை அனுசரித்து இருக்கிறதோ, எவனுடைய புத்தி அவன் பெற்ற கல்விக்கு விரோதமாக இல்லையோ, பண்டைக்கால மனிதர்களால் நல்லதென்று தீர்மானிக்கப்பட்டிருக்கிற நடத்தையை எவன் மீறுவதில்லையோ, எவன் எப்பொழுதும் தொன்று தொட்டு இருந்து வரும் ஸநாதன தர்மத்தை தன் இதயத்தில் வீற்றிருக்கச் செய்துள்ளானோ, அவன் அறிவுள்ளவன் ஆவான்!"

அறிவற்றவனின் குணங்கள்

"சாஸ்திரங்களில் கூறியவற்றையும், உலகத்திலுள்ள பெரியோர்களின் சொற்களையும் செவிமடுத்துக் கேட்காதவனும், தன்னை மிகப் பெரியவன் என்று கருதி, கர்வம் கொள்பவனும், இதை முடிக்கத் திறமையில்லை எனத் தெரிந்தும் அதை நிறைவேற்றச் செயல்பட்டுக் கொண்டிருப்பவனும், பாவம் செய்து பொருளீட்ட விரும்புபவனும், தன் நன்பனை மோசம் செய்பவனும், பகைவரிடம் நட்புக் கொள்பவனும், தானே செய்ய வேண்டிய வேலைகளை, வேலைக்காரர்களைச் செய்யும்படி ஏவுபவனும், தராதரம் இல்லாமல் ஸ்நேகம் கொள்பவனும், அவசர அவசரமாகச் செயல்படுபவனும், விரைவில் செய்து முடிக்க வேண்டிய வேலையைச் செய்யாமல் தாமதம் செய்பவனும் அறிவிலிகள்".


மேலும் "பித்ருக்களுக்கு ஈமக்கடன்கள் செய்யாதவனும், தேவதைகளுக்கு பூஜை செய்யாதவனும், நல்லோரிடம் நட்பு கொள்ளாதவனும், அழைக்கப்படாத இடங்களுக்கு செல்பவனும், கேட்காவிட்டாலும் பல விஷயங்களை சொல்லித்தீர்ப்பவனும், நம்பத் தகுந்தவனை நம்பாதவனும், தனது குற்றத்தைப் பிறர் மீது சுமத்துபவனும், பிறருடைய‌ மனைவியை காம நோக்குடன் பார்ப்பவனும், கஞ்சனுக்கு வேலை செய்பவனும் அறிவற்றவர்கள் ஆவர்."

- விதுர‌ர்