Saturday, October 31, 2009

அக்பர் பீர்பால் கதைகள்!


கிணற்றுக்குள் விழுந்த வைர மோதிரம்!

ஒரு நாள் அதிகாலையில், சக்ரவர்த்தி அக்பர், சில அதிகாரிகள் புடைசூழ வெளியே உலாவக் கிளம்பினார். பீர்பலும் அவர் கூடவே சென்றார்.

அக்பர் கோடையின் கொடுமையைப் பற்றி பேசிக் கொண்டே வந்தார். அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிணறு தென்பட்டது. அதைப் பார்த்த அக்பர், "தலைநகரில்உள்ள கிணறுகள் யாவும் வற்றி விட்டன என்று கேள்விப்பட்டேன். இந்தக் கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா பார்ப்போம்" என்று சொல்லிக் கொண்டே அதன் அருகில் சென்று குனிந்து பார்த்தார்.

"இது மிகவும் ஆழமான கிணறு. அடியில் தண்ணீர் இருக்கிறதா, இல்லையா என்றே தெரியவில்லை" என்று அக்பர் கூறவும், அதைக் கேட்ட பீர்பால், "பிரபு! தண்ணீர் இருக்கிறதா என்று அறிய ஒரு கல்லைத் தூக்கிப் போட்டால் தெரிந்து விடுமே! தண்ணீர் இருந்தால் கல்பட்டு தெளிக்கும்,"

என்று சொல்லிவிட்டு, கிணற்றினுள் ஒரு கல்லை எறிந்தார். கல் அடியில் சென்று விழுந்த ஒலியைக் கேட்டதுமே, கிணறு முற்றிலும் வற்றியுள்ளது என்று தெரிந்தது.

"பீர்பால்! கிணற்றினுள் ஒற்றைக் கல்லாகப் போடக் கூடாதென்று சொல்லுவார்கள். அதனால் இன்னொரு கல்லை நான் போடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே, தன் விரலில் இருந்த ஒரு வைர மோதிரத்தை அக்பர் கிணற்றினுள் போட, சுற்றியிருந்த அனைவரும் திகைத்துப் போயினர்.

"பிரபு! வைரமோதிரத்தை ஏன் போட்டீர்கள்?" என்று பீர்பால் கேட்க, "வைரமும் ஒரு கல்தானே! அதனால்தான் போட்டேன்" என்றார் அக்பர்.

"ஆயினும் கல்லெல்லாம் வைரக்கல்லாகுமா? நீங்கள் செய்தது சரியா?" என்று பீர்பால் கேட்டார்.

"அதனால் என்ன, பீர்பால்! யாரையாவது கிணற்றில் இறங்கச் சொல்லி மோதிரத்தை எடுத்து விட்டால் போகிறது!" என்ற அக்பர் தொடர்ந்து, "கிணற்றுள் இறங்கினால் யார் வேண்டுமானாலும் மோதிரத்தை எடுத்து விடலாம். ஆனால் யாராவது கிணற்றுக்குள் இறங்காமலே அந்த மோதிரத்தை எடுக்க முடியுமா?" என்று கேட்டார்.

"பிரபு! எனக்கு யோசனை தோன்றிவிட்டது!" என்று பீர்பால் உற்சாகத்துடன் கூற, "அப்படியா? நீ எப்படி மோதிரத்தை கிணற்றுள் இறங்காமலே எடுப்பாய்?" என்று ஆர்வத்துடன் அக்பர் கேட்டார்.

பீர்பால் ஒரு நூலை எடுத்து அதன் ஒரு முனையில் கல் ஒன்றக் கட்டினார். அந்தக் கல்லை கிணற்றுக்கடியில் இருந்த ஈரமான சானத்தில் நன்றாக முக்கினார். நூலின் மறுமுனையை கிணற்றுக்கருகே இருந்த ஒரு மரத்துடன் சேர்த்துக் கட்டினார். சானத்துடன் இருந்த கல்லை கிணற்றுக்குள்ளிருந்த வைரக்கல் மீது குறிபார்த்து எரிந்தார். அந்த கல் வைர மோதிரத்தின் மீது நன்றாக ஒட்டிக் கொண்டது.

அங்கிருந்த காவலர்களை அதைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு பீர்பால் வீடு திரும்பினார். வீடு திரும்பியபின் உணவருந்தி விட்டு நிம்மதியாகத் தூங்கினார். பிறகு மாலையில் எழுந்து கிணற்றை நோக்கிச் சென்றார். காலையில் அவர் வீசியெறிந்த சாணம் வெயிலில் நன்றாகக் காய்ந்து உலந்திருந்தது. அதன் மீது அவர் வீசிய கல்லும் மோதிரமும் சாணத்துடன் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்தது.

பிறகு பீர்பால் மிகவும் நிதானமாகவும், ஜாக்கிரதையாகவும் நூலைப் பிடித்து மேலே இழுக்க, கல் கிணற்றுக்குள்இருந்து மேலே வந்துவிட்டது. கல்லில் ஒட்டிய சாணமும் உலர்ந்து போய் அதனுடன் சேர்ந்து பத்திரமாக இருந்தது. அதிலிருந்து மோதிரத்தை எடுத்து, சுத்தமாகக் கழுவியபின், பீர்பால் அரண்மனை தர்பாருக்குச் சென்றார்.

அந்த நேரத்தில் அக்பர் தர்பாரில் தன் அதிகாரிகளுடன் அமர்ந்திருந்தார். அவரை வணங்கிய பீர்பால், "பிரபு! நான் வெற்றிகரமாகத் தங்கள் மோதிரத்துடன் வந்திருக்கிறேன்" என்றதும் அக்பருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

"கிணற்றுள் இறங்காமலேயே மோதிரத்தை எடுக்க உன்னால் எப்படி முடிந்தது?" என்று அக்பர் ஆவலுடன் கேட்க "மூளையைப் பயன்படுத்தினால் முடியாதது ஒன்றுமில்லை என்று நீங்கள் சொன்னதை நிரூபித்து விட்டேன்" என்று கூறிய பீர்பால், தான் மோதிரத்தை மீட்டதை விளக்கிக் கூறினார்.

"பலே! சபாஷ்! உன்னைப் போல் புத்திசாலியை நான் பார்த்ததே இல்லை!" என்று பாராட்டிய அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பையை பீர்பாலுக்குப் பரிசளித்தார்.

No comments: