Saturday, January 9, 2010

மரணத்திற்கு அப்பால் - 4


ரயிலில் இரவு உணவை முடித்து விட்டு மீண்டும் பேச்சைத் தொடர்ந்தோம். ஊர் வருவதற்குள் முழுமையாகச் சொல்லி விடும் படி குருசாமியை கேட்டுக் கொண்டேன். அவரும் தொடர்ந்தார்.

________________________________________________________________________________________
"நாம் யார்? நமது வடிவம் என்ன? நமது உணர்ச்சிகள் என்ன? நமது நிஜமான இருப்பிடம் என்ன? நாம் எங்கிருந்து வந்தோம்? எங்கே போகிறோம்?

இந்த வினாக்களையெல்லாம் புரிந்து கொள்ள நாம் அறிய வேண்டிய ஒரே மூலப் பொருள் "ஆத்மா"

ஆம் நாம் தான் அது. அது தான் நாம். அதன் வடிவம் என்னவோ அது தான் நமது நிரந்தர வடிவம். அதன் உணர்வு என்னவோ அதுதான் நமது நிரந்தர உணர்வு. அதன் நிரந்தர வசிப்பிடம் எதுவோ அங்கே செல்ல வேண்டி முயல்வது தான் நம்முடைய நிஜமான ஞானத்தின் அடித்தளம்.

"தத்வம் அஸி" - "நீ தான் அது" (அது = ஆத்மா) - இதை முதலில் உணர்ந்தால் அடுத்த கட்டமான "அஹம் ப்ரம்மாஸ்மி" என்பது உணரப்படும்."
__________________________________________________________________________________________

"என்னை யாருக்கு தானமாகக் கொடுக்கப் போகிறீர்கள்" என்றான் நசிகேதன்.

வாஜ்ரவஸ் கோபமாக கர்ஜித்தான் "உன்னை எமனுக்குக் கொடுக்கிறேன்!"

இந்த வார்த்தை தான் நசிகேதன் எமனைச் சந்திக்க காரணமானது.

தந்தை ஆத்திரத்தால் சொன்னாலும், சொன்னது சொன்னது தான். அதனால் தான் எமனிடம் போய் ஆகவேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான் நசிகேதன். ஆனால் போகும் முன் தன் தந்தைக்கு உண்மையை உணர்த்த விரும்பினான்.

அவன் தன் தந்தையிடம் கூறினான் " தந்தையே! நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள். நாம் வாழ்ந்து அனுபவித்து தான் உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்றிருந்தாலும், பிறருடைய அனுபவங்களும் நமக்குப் பாடமாக அமைவதுண்டு.

தீ சுடும் என்பதைத் தொட்டுப் பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. சூடுபட்டவரின் வேதனையே நமக்கு அதை உணர்த்திவிடுவதுண்டு. அதனால் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதன் வழி செல்வது நமக்கும் நன்மை பயக்கும்."

என்று கூறி எமலோகம் புறப்படுகிறான். தந்தை தன் மகனின் நிலையை உணர்ந்து வருந்துகிறார்.

ஆனால் நசிகேதனோ "நாம் செடி கொடிகளைப் போல மீண்டும் மீண்டும் பிறக்கவும் இறக்கவும் செய்கிறோம். ஆகையால் நான் எமலோகம் செல்வது பற்றி வருந்த வேண்டாம்". என்று தன் தந்தைக்கு ஆறுதல் கூறி புறப்படுகிறான்.




இதில் ஒரு விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். நசிகேதன் பிடிவாதக்காரனாக இருந்த அதே நேரத்தில் மிகவும் அமைதியான குணத்தையும் கொண்டிருந்தான். தன்னை எமனுக்கு கொடுப்பேன் என்ற தன் தந்தையின் மீது அவனுக்கு கோபம் வரவில்லை.

என்னை இப்படி அனுப்பி விட்டாயே என்று தந்தையை நொந்து கொள்ளவில்லை. தந்தையின் வாக்கை கட்டளையாக பாவித்து அதை செயல்படுத்த துவங்கினான் என்பது ஒரு சிறுவனுக்கு இருக்கும் மிகப்பெரிய பக்குவம்.

இன்றைய நாட்களில் தாய் தந்தையர் பிள்ளைகளின் நலன்களுக்காக நல்லதைச் சொன்னால் கூட கேட்கும் பக்குவம் பிள்ளைகளுக்கு இருப்பதில்லை. சரி விஷயத்திற்கு வருவோம்.

எமதர்மன் இருக்கும் இடம் தேடி எமலோகம் சென்றான் நசிகேதன். நசிகேதன் சென்றபோது எமதர்மன் அங்கே இல்லை.

எனவே அவன் எமனின் மாளிகையின் முன்னால் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அதன் பிறகே எமதர்மன் வந்தான். எமனிடம் வாயிலில் நசிகேதன் என்றொரு சிறுவன் தங்களைக் காண காத்திருப்பதாக தகவல் சொல்லப்பட்டது.

செய்தி கேட்டு எமதர்மன் ஒரு சிறுவனை மூன்று நாட்கள் உணவு தண்ணீர் இல்லாமல் காத்திருக்கச் செய்தேனே என்று வருந்துகிறான். எமதர்மனது மந்திரிகள் அவன் வருத்தத்தைப் போக்க எமனிடம் யோசனை சொல்கிறார்கள் "நல்லோன் ஒருவன் விருந்தினனாக வரும்போது அவன் ஒரு நெருப்பைப் போலவே நுழைகிறான். நல்லவர்கள் அவனுக்கு தண்ணீரைக் கொடுத்து உபசரித்து அவனை அமைத்திப் படுத்துவார்கள். எமதர்மனே! நீயும் அந்தச் சிறுவனுக்கு தண்ணீர் கொடுத்து உபசரி" என்று எடுத்துச் சொல்கிறார்கள்.

மேலும் நல்ல மனிதர்கள் விருந்தினராக வந்தால் அவர்களை உபசரிக்காமல் புறக்கனிப்பதால் நடக்கும் தீமைகளையும் எடுத்துச் சொல்கிறார்கள்.

"எமதர்மனே! யாருடைய வீட்டில் நல்லோன் ஒருவன் உணவின்றி இருக்க நேர்கிறதோ, அவனது நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் அழிந்து விடுகின்றன. நல்லோனை உபசரிக்காதவன் அவன் செய்த புண்ணியங்களின் பலன்களை இழக்கிறான். இனிய பேச்சின் பலன்களையும் யாகங்களால் உண்டான பலன்களையும் இழக்கிரான். வழிபாடுகளினாலும் நற்பண்புகளாலும் உண்டான பலன்களை இழக்கிறான். அவனது பிள்ளைச் செல்வம், கால்நடைச் செல்வம் அவனிடமிருந்து அழிகின்றன. எனவே நீ அதற்கு இடம் கொடுத்து விடாதே!" என்று மந்திரிகள் எமனை எச்சரிக்கிறார்கள்.



இதனால் கலக்கமுற்ற எமதர்மன் நசிகேதனை வரவேற்க வாசலை நோக்கிச் செல்கிறான். தன்னை இன்னும் சிறிது நேரத்தில் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தப் போகிறான் அந்தச் சிறுவன் என்று தெரியாமலே அவனை வரவேற்கச் செல்கிறான் எமன்!.

தொடர்ந்து பயணிப்போம்......

மரணத்திற்கு அப்பால் - 5

1 comment:

Anonymous said...

hi,...hyyram will u pls post vikramathithan kathaigal ...bcz i am very interesting to know more about those stories...........