Thursday, June 24, 2010

தமிழுக்கு மாநாடு நடத்த தகுதி கொண்டவர் யார்?


உண்மையான தமிழ்தாத்தா - டாக்டர் உ.வே.சாமிநாதய்யர்

1855-ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19-ஆம் நாள் நாகை மாவட்டம் சூரியமூலை என்ற ஊரில் வேங்கடசுப்பையா- சரஸ்வதி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் உ.வே.சாமிநாதய்யர்.

தமிழ் மொழியின் பழம்பெருமையைப் பலர் அறியாமல் வாழ்ந்து வந்த காலத்தில், அதாவது 19-ஆம் நூற்றாண்டின் நடுவில், தமிழுக்கு புத்துயிர் ஊட்ட, பலர் தோன்றினார்கள். அவர்களில் பெருமைக்குரியவராகத் திகழ்பவர்தான் தமிழ்த் தாத்தா என்று அழைக்கப்படும் பேராசிரியர் உ.வே.சாமிநாதய்யர்!

அக்காலத்தில் நூல்கள் அனைத்தும் பனை ஓலையில் எழுதப்பட்டிருந்தன. இவற்றையே ஏட்டுச் சுவடிகள் என்று கூறுவர். இவ்வாறு ஓலையில் எழுதப்பட்டிருந்தவைகளை அச்சிலேற்றி நூல் வடிவாக்கி காக்க வேண்டும் என்ற எண்ணம் உ.வே.சாமிநாதய்யருக்குத் தோன்றியது. இவர் இதுபோன்ற ஏட்டுச்சுவடிகளை ஆராய்ந்து பின்பு நூல் வடிவிலே பதிப்பிக்கும் பொருட்டு திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம் போன்ற தமிழ் வளர்த்து வரும் ஆதீனங்களில் சுவடிகளைத் தேடி அலைந்தார்.

அங்கு அருமையான சுவடிகள் பல கரையான்கள் அரிக்கப்பட்ட நிலையில் இருக்கக் கண்டு கடுமையாக மனம் புண்பட்டார். தமிழன் தமிழன் என்று பேசிக்கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் தமிழில் இப்படி பொக்கிஷங்கள் பல இருந்தனவா என்று கூட அறிந்திருக்காத காலம் அது. அத்தகைய ஒரு காலகட்டத்தில் அழிவு நிலையில் இருந்த தமிழ் பொக்கிஷங்களை உயிராகக் கொண்டுவந்து உலகத்திற்கு கொடுக்க பேரார்வம் கொண்டார்.

அந்த காலத்தில் எல்லாம் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் தான் இருந்தன. இவர் தொடக்கக் கல்வியை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தான் பயின்றார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் மணலில் தான் எழுத்துக்களை எழுதிப் பழகுவார்கள். அப்படித் தமிழ் கற்ற உ.வே.சாமிநாதய்யர் தான் பின்னாளில் அழகுத்தமிழை அச்சிலேற்றினார். இவ்வாறு தமிழ் கற்ற உ.வே.சாமிநாதய்யர் பிற்காலத்தில் கும்பகோணம் கல்லூரியில் 23 ஆண்டுகளும், சென்னை மாநிலக் கல்லூரியில் 16 ஆண்டுகளும் பேராசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது. இன்றைக்கு திராவிடர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்த கூட்டங்கள் அன்றைக்கும் இருந்தன. ஆனால் அவர்களில் யாருக்கும் தமிழின் அழிவு நிலை குறித்து கவலை இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் உ வே சுவாமிநாதய்யர் பெருங்கவலை கொண்டார்.

இவரது தமிழ் ஆர்வத்தைக் கண்டு வியந்த தருமபுரம் ஆதீனத்தின் தலைவராக இருந்த ஸ்ரீ மாணிக்கவாசகர் தேசிகர் ஆதீனத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட சுவடிகளை உ.வே. சாமிநாத ஐயருக்கு கொடுத்து உதவியிருக்கிறார் என்கிறது அவரது வரலாறு.

கரையானின் அரிப்பில் கிடந்து சத்தமே இல்லாமல் கண்கானாமல் அழிந்து போக இருந்த தமிழை வெளி உலகிற்கு கொண்டு வர உ.வே.சாமிநாத ஐயர். அரும்பாடு பட்டார். அவரது பேரார்வத்தையும் உழைப்பையும் கண்டவர்கள் அவர்கள் பலரும் அவருக்கு உதவ முன் வந்தனர். இப்படி ஏடுகளைச் சேகரித்து முதன் முதலில் பதிப்பித்த நூல் தான் "சீவகசிந்தாமணி'. எழுத்தானியால் எழுதப்பட்டு ஏட்டில் இருந்ததை அச்சில் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார் உ. வே சாமிநாத ஐயர்.

அடுத்து சங்க இலக்கியங்களுள் ஒன்றான "பத்துப்பாட்டு' என்ற நூலை உ.வே.சாமிநாதய்யர் அச்சிட்டு வெளியிட்டார். அதன் பிறகு ஐம்பெருங்காப்பியங்களில் "சிலப்பதிகாரம்', "மணிமேகலை' போன்ற நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார். இப்படி கரையான்களுக்குத் தீனியாகவிருந்த சிலப்பதிகாரத்தை தூசி தட்டி எடுத்து அச்சிலேற்றி உ வே சாமிநாத ஐயர் காத்திராவிட்டால் இன்று கன்னகிக்கு சிலை ஏது? கண்ணகி சிலைக்காக உயிரையும் கொடுப்பேன் என்ற இவர்களது போலி போராட்டங்கள் ஏது?

இதன் பின்னர் "குறுந்தொகை' என்ற இலக்கியத்திற்கு உரை எழுதி வெளியிட்டார். பின்னர் தொடர்ச்சியாக இதைத் தொடர்ந்து எண்ணற்ற நூல்களை வெளியிட்டு தமிழுக்கு அரும்பணியாற்றியிருக்கிறார். இவர் பதிப்பித்த நூல்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். "சங்க நூல்கள்', "பிற்கால நூல்கள்', "இலக்கண நூல்கள்', "திருவிளையாடற் புராணம்' போன்ற காவிய நூல்களாகும். ஆகமொத்தம் ஏட்டுச் சுவடிகளைப் பதிப்பித்து நூலாக வெளியிட உ.வே.சாமிநாதய்யர் பட்ட இன்னல்கள் கணக்கில் அடங்காதவை.

குறிப்பாக ஓசைச்சுவடிகளில் இருக்கும் கையெழுத்துக்களை அப்படியே புரிந்து கொள்ள முடியாது. ஒரு எழுத்தை பல ஏடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்து அந்த எழுத்தை உள்ளடக்கிய வார்த்தை என்ன பொருளைக் குறிக்கிறது என்பதை தெளிவாகப் புரிந்து கொண்ட பின்னரே அவற்றை அச்சேற்ற முடியும். அதற்கு சரியான உரை எழுதவும் முடியும். அவ்வாறு பல பல எழுத்துக்களையும் வார்த்தைகளையும் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்த்து தெளிவாகப் புரிந்து கொண்டு உலகிற்கும் எடுத்துரைத்து நமக்கெல்லாம் பழந்தமிழைக் காத்துக் கொடுத்த உ.வெ.சாமிநாதய்யரின் உழைப்பும் அர்பணிப்பும் ஈடு செய்ய முடியாதவை.

அத்தகைய இவரது உழைப்பிற்கும் அர்பனிப்பிற்கும் அவர் எடுத்து வைத்து, எழுதி வைத்த தமிழை படித்து விட்டு தமிழ் பேசி அத்தமிழ் செம்மொழியானதற்கும் தானே காரணம் என்றும் கூறி அதற்கு மாநாடு நடத்துபவர்கள் ஈடாவார்களா?

1906-ஆம் ஆண்டு சென்னை அரசாங்கம் (தமிழ்நாடு அப்போது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது) இவரது தமிழ்த் தொண்டை பாராட்டி "மகா மகோ பாத்யாயர்' என்ற பட்டத்தை வழங்கியது. 1932-ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகம் இவருக்கு "தமிழ் இலக்கிய அறிஞர்' என்ற விருதை வழங்கிக் கௌரவித்தது.

1937-ஆம் ஆண்டு சென்னையில் மகாத்மா காந்தி தலைமையில் ஒரு இலக்கிய மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் உ வே சாமிநாதய்யர் உரை நிகழ்த்தினார். அவரது தமிழார்வமும் செந்தமிழ் உரையையும் கேட்டு மெய்சிலிர்துப் போன காந்தியடிகள் "இவரது உரையைக் கேட்கும் போது, இவரிடம் நான் தமிழ் கற்க வேண்டும் என்ற பேரார்வம் உண்டாகிறது" என்றார்.

இவ்வாறு தனது தீராத தமிழார்வத்தாலும் தமிழர்களுக்கு அழிவிலிருந்த பல தமிழ் பொக்கிஷத்தை மீட்டுக் கொடுத்து அரும்பெரும் பணியைச் செய்தும் "தமிழ் தாத்தா" என்று பெயர் பெற்றார் உ.வே.சாமிநாதய்யர். இவர் 1940-ஆம் ஆண்டு "என் சரித்திரம்' என்ற நூலை எழுதினார். நம்மைப் போன்ற இக்கால சந்ததியினர் உ.வே.சாமிநாதய்யர் பற்றியும் அவர் தமிழுக்காக அரும்பணியாற்றியதைப் பற்றியும் தெரிந்து கொள்ள இவரது எழுத்து உதவுகிறது. ஆக உ.வே.சாமி நாதய்யரின் இத்தகைய உழைப்பு இருந்திருக்காவிட்டால் நம் சந்ததியினர் இன்றைக்கு எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, புறநானூறு, அகநானூறு என்றெல்லாம் படிப்பதற்கு பாடங்கள் இருந்திருக்காது. அத்தகைய பழந்தமிழர் பொக்கிஷங்கள் எல்லாம் மண்ணோடு மண்ணாக சத்தமில்லாமல் மக்கிப் போயிருக்கும்.

உ.வே.சாமிநாதய்யர் பதிப்பித்த நூல்களின் பட்டியல் வாய்பிளக்கும் அளவிற்கு இவ்வாறு நீள்கிறது.

1 -அழகர் கிள்ளை விடு தூது 1938
2 -ஆற்றூர்ப் புராணம் 1935
3 -இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை 1936
4 -உதயண குமார காவியம் 1935
5 -உதயணன் சரித்திரச் சுருக்கம் 1924
6 -ஐங்குறு நூறு 1903
7 -கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது 1888
8 -கடம்பர் கோயிலுலா 1932
9 -கபாலீசுவரர் பஞ்சரத்தினம் 1940
10- கலைசைக் கோவை 1935
11 -களக்காட்டு சத்தியவாகீசர் இரட்டை மணிமாலை 1932
12 -கனம் கிருணயைர் 1936
13 -குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு 1939
14 -குறுந்தொகை 1937
15 -கோபால கிருஷ்ண பாரதியார் 1936
16 -சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் 1928
17 -சங்கர நயினார் கோயிலந்தாதி 1934
18 -சங்கரலிங்க உலா 1933
19 -சிராமலைக் கோவை 1937
20 -சிலப்பதிகாரம் 1892
21 -சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள் 1932
22 -சிவசிவ வெண்பா 1938
23 -சீகாழிக் கோவை 1903
24 -சீவக சிந்தாமணி 1887
25 -சூரைமாநகர்ப் புராணம் 1904
26 -செவ்வைச் சூடுவார் பாகவதம் 1941
27 -தக்கயாகப் பரணி 1930
28 -தண்டபாணி விருத்தம் 1891
29 -தணிகாசல புராணம் 1939
30 -தமிழ்நெறி விளக்கம் 1937
31 -தமிழ்விடு தூது 1930
32 -தனியூர்ப் புராணம் 1907
33 -திரு இலஞ்சி முருகன் உலா 1935
34 -திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா 1933
35 -திருக்கழுக்குன்றத்துலா 1938
36 -திருக்காளத்திநாதர் இட்டகாமிய மாலை 1938
37 -திருக்காளத்தி நாதருலா 1904
38 -திருக்காளத்திப் புராணம் 1912
39 -திருக்குடந்தைப் புராணம் 1883
40 -திருக்குற்றாலச் சிலேடை வெண்பா 1940
41 -திருத்தணிகைத் திருவிருத்தம் 1914
42 -திருநீலகண்டனார் சரித்திரம் 1936
43 -திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் 1908
44 -திருப்பூவண நாதருலா 1904
45 -திருப்பெருந்துறைப் புராணம் 1892
46 -திருமயிலைத் திரிபந்தாதி 1888
47 -திருமயிலை யமக அந்தாதி 1936
48 -திருமலையாண்டவர் குறவஞ்சி 1938
49 -திருவள்ளுவரும் திருக்குறளும் 1936
50 -திருவாரூர்க் கோவை 1937
51 -திருவாரூர்த் தியாகராச லீலை 1905
52 -திருவாரூருலா 1905
53 -திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 1906
54 -திருவாவடுதுறைக் கோவை 1903
55 -தேவையுலா 1907
56 -நல்லுரைக் கோவை பகுதி 1 1937
57 -நல்லுரைக் கோவை பகுதி 2 1937
58 -நல்லுரைக் கோவை பகுதி 3 1938
59 -நல்லுரைக் கோவை பகுதி 4 1939
60 -நன்னூல் சங்கர நமச்சிவாயருரை 1925
61 -நன்னூல் மயிலை நாதருரை 1925
62 -நான் கண்டதும் கேட்டதும் 1936
63 -நினைவு மஞ்சரி - பகுதி 1 1937
64 -நினைவு மஞ்சரி - பகுதி 2 1942
65 -நீலி இரட்டை மணிமாலை 1874
66 -பத்துப் பாட்டு மூலம் 1931
67 -பத்துப் பாட்டு மூலமும் உரையும் 1889
68 -பத்மகிரி நாதர் தென்றல் விடு தூது 1932
69 -பதிற்றுப் பத்து 1904
70 -பரிபாடல் 1918
71 -பழமலைக் கோவை 1935
72 -பழனி இரட்டைமணி மாலை 1935
73 -பழனி பிள்ளைத் தமிழ் 1932
74 -பாசவதைப் பரணி 1933
75 -புகையிலை விடு தூது 1939
76 -புத்த சரித்திரம், பெளத்த தருமம், பெளத்த சங்கம் 1898
77 -புதியதும் பழையதும் 1936
78 -புறநானூறு 1894
79 -புறநானூறு மூலம் 1936
80 -புறப்பொருள் வெண்பா மாலை 1895
81 -பெருங்கதை 1924
82 -பெருங்கதை மூலம் 1936
83 -மகரநெடுங் குழைக்காதர் பாமாலை 1939
84 -மகாவைத்தியநாதையைர் 1936
85 -மண்ணிப்படிக்கரைப் புராணம் 1907
86 -மணிமேகலை 1898
87 -மணிமேகலைக் கதைச் சுருக்கம் 1898
88 -மத்தியார்ச்சுன மான்மியம் 1885
89 -மதுரைச் சொக்கநாதர் மும்மணிக் கோவை 1932
90 -மதுரைச் சொக்கநாதர் உலா 1931
91 -மான் விடு தூது 1936
92 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 1 1933
93 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம் - பகுதி 2 1934
94 -மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு 1910
95 -வலிவல மும்மணிக் கோவை 1932
96 -வித்துவான் தியாகராச செட்டியார் 1942
97 -வில்லைப் புராணம் 1940
98 -விளத்தொட்டிப் புராணம் 1934
99 -வீரவனப் புராணம் 1903
100- வேணுவனலிங்க விலாசச் சிறப்பு 1878

அத்தகைய இவரது உழைப்பிற்கும் அர்பனிப்பிற்கும், அவர் எடுத்து வைத்து, எழுதி வைத்த தமிழை படித்து விட்டு அத்தமிழைப் பேசி, அத்தமிழ் செம்மொழி ஆனதற்குத் தாமே காரணம் என்றும் கூறி அதற்கு மாநாடு நடத்துபவர்கள் ஈடாவார்களா? தமிழ் தானே செம்மொழியாக இருக்கும் போது அதற்கு அந்த அந்தஸ்தை ஒருவர் வாங்கிக் கொடுக்க முடியுமா? பல கோடி மனிதர்களின் தரமான ஒரு மொழிக்கு தனி ஒரு மனிதரால் சர்டிபிகேட் வழங்க முடியுமா? தமிழ் தனக்குத் தரச்சான்றிதழ் வேண்டுமென்று தமிழர்களிடம் கேட்டதா? அப்படி ஒரு சான்றிதழை தனி ஒரு மனிதன் தாமே வாங்கிக் கொடுத்ததாய் விழா எடுப்பதும் தமிழுத்தான் பெருமையா?

தமிழை யாரும் வளர்க்க முடியாது. தமிழுக்காக ஒருவன் உழைக்கத்தான் முடியும். தமிழன் உழைத்தால் மட்டும் தான் தமிழ் வளரும். அவ்வாறு உழைப்பின் மூலம் தமிழின் கூடவே தாமும் வாழ்ந்து கொண்டிருப்பவர் உ.வே.சாமிநாதய்யர் அவர்களே! அத்தகைய மனிதரைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சி கூட செம்மொழி மாநாட்டில் நடத்தப்படவில்லை. யாரோ வெள்ளைக் காரனான ஒரு காடுவெல்ஸைப் பற்றி புலகாங்கிதம் அடைந்து பேசும் மாநாட்டுத் தலைவர், உ.வே.சாமிநாதய்யரின் தமிழுக்கான உழைப்பைப் பற்றி வாய்திறக்கவில்லை. அவரைப் புகழ்ந்து பேசவில்லை. தாமே தமிழ்த்தாத்தா என்று உலகிற்குச் சொல்ல ஆசைப்படுபவர் உண்மையான தமிழ்த்தாத்தா பற்றிக் கூறிவிடுவாரா என்ன? காரணம் ஜாதிக்காழ்புணர்ச்சி. உ.வே.சாமிநாதய்யர் என்பதே அவரது முழுப்பெயராக இருக்கும் போது, அதில் ஐயர் சேர்ந்து விட்ட காரணத்தாலேயே அவரது முழுப்பெயரைச் சொல்வதைத் தவிர்த்து உ.வே.சா என்றே சுருக்கிக் கூறுகின்றனர். இது தான் அவருக்கு இத்தகைய தமிழறிஞர்கள் செய்யும் மரியாதை எனக்கொள்ளலாம்.

இப்போது சொல்லுங்கள், தமிழுக்கு மாநாடு நடத்த தகுதி கொண்டவர் யார்?

அடியேன் எடுத்தியம்பியது மிகச்சிறிய தகவலே. உ.வே.சுவாமிநாதய்யர் பற்றி மேலும் விரிவாக அறிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்!


தமிழ்த்தாத்தாவே! உம்மை வணங்குகிறோம்!

18 comments:

http://rkguru.blogspot.com/ said...

அருமையான பதிவு வாழ்த்துகள்..!

உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_24.html

hayyram said...

நன்றி திரு.குரு.

அ. நம்பி said...

மாநாடு நடத்துபவர் `வாழும் வள்ளுவர்'.

வாழ்ந்த வள்ளுவரைவிட `வாழும் வள்ளுவர்' எல்லா விதத்திலும் பெரியவர்; சிறந்தவர்! இது உலகறிந்த உண்மை.

"டாக்டர் கலைஞர்தான் தமிழ்; தமிழ்தான் டாக்டர் கலைஞர். கலைஞரையும், தமிழையும் பிரிக்க முடியாது" என்று தலைசிறந்த தமிழாய்வாளரும் தமிழறிஞரும் மூதறிஞருமான தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா நேற்றுச் சொல்லி இருந்தாரே, நாளிதழ் படிக்கவில்லையா ஐயா?

நீங்கள் சொல்பவர் `வெறும்' தமிழ்த்தாத்தா.

இப்போது சொல்லுங்கள்: இருவருள் யார் பெரியவர், சிறந்தவர்... வெறும் தமிழ்த்தாத்தாவா, `வாழும் வள்ளுவரா'?

அஹோரி said...

இப்படி நாலு பேர் காரி துப்புவீங்கன்னு தெரிஞ்சிதான் தற்குறி கருணா துண்டு போட்டு கிட்டு திரியறார்.

thiruchchikkaaran said...

மிகச் சிறப்பான கட்டுரை. உ.வே.சு ஐயா இல்லாவிட்டால் தமிழ் இலக்கியங்கள் பலவும் இல்லாமல் போயிருக்கும்.

தமிழ்த் தாயின் உண்மைப் புதல்வர்களில் ஒருவர் உ.வே.சு ஐயா, தமிழ் மொழிக் காவலர்.

அவர் வாழ்ந்த காலத்தில் உ.வே. சுவாமிநாதய்யர் என்று அழைக்கப் படும் பழக்கம் இருந்தது. தமிழர்கள் , இந்தியரக்ள ஒரு சமூகமாக இணைய வேண்டிய கால கட்டத்திலே இப்படி சாதிக்கு முக்கியத்துவம் தருவது உ.வே.சு ஐயாவை பலரும் சாதி அடிப்படையில் காழ்ப்புணர்ச்சி செய்ய வாய்ப்பாகவே அமையும்.

hayyram said...

//வாழ்ந்த வள்ளுவரைவிட `வாழும் வள்ளுவர்'// வாழ்ந்த வள்ளுவருக்கு எதிர்மறையாக `வாழும் வள்ளுவர்' என்று சொல்ல வருகிறீர்கள் என்று புரிகிறது. நன்றி திரு.நம்பி.

hayyram said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி அஹோரி

hayyram said...

//தமிழ்த் தாயின் உண்மைப் புதல்வர்களில் ஒருவர் உ.வே.சு ஐயா, தமிழ் மொழிக் காவலர்// அத்தகைய உண்மைப் புதல்வரின் பிறந்தநாளுக்கு அவரது திரு உருவிற்கு ஒரு மாலையாவது போட்டிருப்பாரா இன்று மாநாடு நடத்துபவர்? போலிகள் பள பளவென்று இருப்பதால் மக்கள் ஏமாந்து விடுவது சகஜமாகி விடுகிறது.

hayyram said...

நன்றி திருச்சி ஐயா!

sundar said...

Dr.U.Ve.Swaminathaiyer was truly great and his greatness was not imposed or trumpetted.If people can go thro his autobiography"En Chritham",everybody can understand the struggles he underwent to publish the five epics like Silappadhikaram,Manimekalai,Seevakachitamani etc.
Only he deserved to be called as a true Tamil who spent his entire life for Tamil and not such persons who use tamil to promote them like the present day Tamil politicians

hayyram said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி திரு.சுந்தர்.

Dr Rama Krishnan said...

heyram, I take hats off for your article. I beg to differ on Gandhi though. Indians have/had been duped about Gandhi.To me he is plain egocentric ecentric Islamic appaeser with weird personel habbits. Sorry for going off topic.
Thanks again for enlighting us on this great soul Tamil Thatha.

அகோரி said...

அருமையான பதிவு

Simulation said...

http://simulationpadaippugal.blogspot.com/2006/02/blog-post_19.html

radhakrishnan said...

எதை எதிர்பார்து அய்ய்ர் உழைத்தார்?
பலருக்கு பிழைக்க வழி கிடைத்த்தற்கு
அவர்கள் நன்றி செலுத்தவேண்டும்.
நல்ல பதிவு.

Parthasarathy said...

சமீபத்தில் ஒரு போஸ்டர் (மன்னிக்கவும், போத்தர்) பார்த்தேன். ஆகத்து என்று ஒரு வார்த்தையைப் பயன்படுத்தி இருந்தார்கள். என்னடா என்று சற்று உற்று பார்த்தால், அவர்கள் குறிப்பது ஆகஸ்ட் மாதத்தை. ஆகா! என்ன ஒரு கண்டுபிடிப்பு? ஆகஸ்டில் வடமொழி சொல் வருகிறதில்லையா, அதெப்படி தமில் சாரி தமிழ் நாட்டில் அனுமதிப்பது. அதான் இப்படி. இதன் மூலமாக ஒன்று தெளிவாகிறது, இப்படி தப்பாகவேனும் தமிழ் படுத்துவோமே தவிர தமிழ் மாதங்களின் பெயர்களாகிய ஆடி, ஆவணி இதையெல்லாம் பயன்படுத்த மாட்டோம். அப்போ இனிமேல் கம்யுனிஸ்ட் என்பது கம்யுனித்து என்றும் மார்க்சிஸ்ட் என்பது மார்க்சித்து என்றும் வழங்கப்படுமோ?

hayyram said...

திருமதி பி எஸ் ஸ்ரீதர், உங்கள் வலைப்பு அருமையாக டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது. அறிமுகத்திற்கு நன்றி. வாழ்த்துக்கள்.

சந்திர மௌலி said...

அருமையான பதிவு