Monday, January 31, 2011

கிருபானந்த வாரியாரின் பொன்மொழிகள்!


நூலறிவு, குலத்தின் உயர்வு, கருணை, பெரும்புகழ், செல்வம், கைம்மாரு கருதாது உல்ளதை வழங்குதல், சிறப்பு, ஒழுக்கம், அரிய தவம், நியமம், நெருங்கிய நட்பு, சமானமில்லாத வலிமை, உண்மை, தூய்மை, அழகு ஆகிய இத்தனை நலன்களும் அடக்கமின்மை என்ற ஒரு தீயகுணத்தால் அழிந்து போகும்.

தன்னிடமுள்ள பொருட்களின் மேல் வைத்திருக்கும் பிடிப்பு பற்று எனப்படும். இன்னும் அது வேண்டும் இது வேண்டும் என்று கொழுந்து விட்டு எரிகின்ற நினைவுகள் ஆசை எனப்படும். இதை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைக்கவில்லையென்றால் எத்தனை வந்தாலும்
திருப்தியின்றி நெய்விட, நெய்விட எரிகின்ற நெருப்பின் தன்மைபோல், சதா உலைந்து அலைந்து நிம்மதியற்ற தன்மையை உண்டாக்கும் பேராசை குணத்திற்கு நம்மை கொண்டுபோய் விட்டு விடும்.

கோபத்தையும் புலனையும் வென்றவர்கள் சொர்கத்தின் வாயிலைப் பார்கின்றனர்.

வீட்டின் வாயிலில் நல்லவனை நிறுத்தி தகாதவர்களை விடாதே என்று காவல் காக்கச் சொல்வது போல நெஞ்சில் நல்லுணர்வு என்ற காவலை வைக்க வேண்டும். அதனால் தீய எண்ணங்களை எண்ணுவதற்கு இடமிராது. நல்லெண்ணங்களே தோன்றும்.

சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உற வினர்கள் ஆவர்.

இன்சொல்லே பேசுகிறவர்களுக்கு உலகில் ஒரு வகையான துன்பமுமில்லை. எம வாதனையும் கிடையாது. சிவகதி திண்ணமாகக் கிடைக்கும்.

தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுட்பங்களைக்கூறி மேலும் தெளிவுபடுத்தலாம்.

ஆனால், இது நல்லது இது கெட்டது என்று அறியாதவனைச் சீர்திருத்த ஆண்டவனாலும் முடியாது.

விடாது கடைந்தால் பாலிலிருந்து வெண் ணெய் வெளிப்படும். அதுபோல, இடைய றாத தியானத்தாலும், வழிபாட்டாலும் இறைவன் நம் உள்ளத்தாமரையில் வெளிப்படுவான்.

பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியசீலர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது.

நாம் செய்த செயல்களின் விளைவு நம்மை வந்து சேரும். நல்வினையும், தீவினையும் வயலில் விதைத்த விதைபோல, பலமடங்கு பெருகி நம்மையே வந்தடையும். இளகிய தங்கத்தில் ரத்தினக்கல் பதியும். அதுபோல, இறைவனை மனமுருக வழிபட்டால் உருகிய நமது உள்ளத்தில் கடவுள் ஒன்றி விடுவார். எங்கும் நிறைந்த இறைவனை எளிமையாகவே வழிபடுங்கள். சாதாரணநீரும், பூவும் கொண்டு இறைவனின் திருப்பாதங்களை பூஜியுங்கள். அவரை ஆடம்பரமாக பூஜிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அன்பையும், ஒழுக்கத்தையும் மட்டுமே ஆண்டவன் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்.

-திரு முருக கிருபானந்த வாரியார்


.

2 comments:

Arun Ambie said...

உதாரணங்கள் சொல்வதில் வாரியார் சுவாமிக்கு இணை அவரே!
அவர் மீனாக்ஷி கல்யாணம் சொற்பொழிவு ஆற்றியபோது சொன்னது:
"சிவபெருமான் மதுரைக்கு 9 மணிக்கு வரவேண்டும். திங்கட்கிழமை 9-10.30 முகூர்த்தம். ப்ரம்மன் 6 மணி முதலே அக்னி வளர்த்து மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறார். மணி 8.55 ஆகிவிட்டது. பெண்ணைப் பெற்ற காஞ்சனமாலை பதறுகிறார் மாப்பிள்ளை வரவில்லையே என்று. மணி 9. கைலாயத்தில் இறைவன் நந்திதேவரிடம்,"நந்தி! புறப்படலாமா" என்று கேட்கிறார். இங்கே மதுரை அரண்மனைக்கு ஒரு சேவகன் ஓடியே வந்து மாப்பிள்ளை மாசி வீதியில் வந்துகொண்டிருக்கிறார் என்றான். திரும்பிப்பார்த்தால் மணவறையில் ப்ரம்மதேவனிடம் பேசிக் கொண்டிருக்கிறார். 9 மணிக்குக் கயிலையில் புறப்பட்டார். அதே 9 மணிக்கு மதுரைக்கு வந்து சேர்ந்தார்.

எப்படி முடியும் என்று கேட்கலாம். உலகத்தில் சூரியன் 6 மணிக்கு உதிக்கும் என்றால் மெட்ராஸ்லயும், கோயமுத்தூர்லயும், மதுரையிலயும் 6 மணிக்குத் தான் உதிக்கும். மெட்ராஸ்ல காலை 6 மணிக்கு உதிக்க ஆரம்பித்து அரக்கோணம் காட்பாடி, ஜோலார்பேட்டை என்றா போகும்?

சூரியனே இப்படி என்றால் முப்பத்துமுக்கோடி தேவர்களுக்கும் தலைவனான எம்பெருமான் சிவபெருமான் 9 மணிக்குக் கிளம்பி அதே 9 மணிக்கு வருவது சாத்தியமான விஷயம்தான் என்றார்.

hayyram said...

//உலகத்தில் சூரியன் 6 மணிக்கு உதிக்கும் என்றால் மெட்ராஸ்லயும், கோயமுத்தூர்லயும், மதுரையிலயும் 6 மணிக்குத் தான் உதிக்கும். மெட்ராஸ்ல காலை 6 மணிக்கு உதிக்க ஆரம்பித்து அரக்கோணம் காட்பாடி, ஜோலார்பேட்டை என்றா போகும்? // super example.