Sunday, October 14, 2012

மிருக வதை!



தினமலர் செய்தி!

அக்டோபர் 08,2012,

இறைச்சிக்காக கால்நடைகள் கடத்தல்

சென்னை:தமிழகத்தில், அடி மாட்டு விலைக்கு வாங்கப்படும் கால்நடைகள், இறைச்சிக்காக கடத்தப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னையில், சமூக நல ஆர்வலர் ராதா ராஜன் மற்றும் பத்ரி இயக்கிய, "கடைசிப் பயணம்' எனும் ஆவணப்படத்தை ஆலய வழிபடுவோர் சங்கம் தயாரித்துள்ளது. படத்தின் குறுந்தகடு வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

இந்த விழாவில், ஆலய வழிபடுவோர் சங்கத்தலைவர் ரமேஷ் கூறியதாவது:

அதிர்ச்சியான உண்மை: கோவில் பாதுகாப்பு மற்றும் கால்நடைப் பாதுகாப்பு ஆகிய, இரண்டு முக்கிய குறிக்கோள்களுடன் இந்த சங்கம் செயல்பட்டு வருகிறது. ஆலயங்கள் மற்றும் அதன் சொத்துகளை, இந்து அறநிலைய துறை எப்படி பராமரித்து, நிர்வாகம் செய்கிறது என்பது குறித்தும், கால்நடைப் பாதுகாப்பில், அதன் அக்கறையின்மை குறித்தும், ஆய்வு செய்துள்ளோம். இறைச்சி உற்பத்தியின் வளர்ச்சிக்கும், வேளாண்மையின் வீழ்ச்சிக்கும், நேரடி தொடர்பு இருப்பது தெரியவந்தது. பசுவதைத் தடுப்பு விவகாரத்தில், தொடர்ந்து அரசுகள் ஏமாற்றி வருகின்றன. இந்த ஆய்வில், நாங்கள் தெரிந்து கொண்ட அதிர்ச்சிகரமான உண்மைகள் தான், இந்த படத்தை தயாரிக்க தூண்டுதலாக அமைந்தது." இவ்வாறு ரமேஷ் கூறினார்

தொடர்ந்து, சமூக ஆர்வலர் ராதா ராஜன் பேசியதாவது:

உலகில், அதிகளவில் இறைச்சி உற்பத்தி செய்யும் முதல் மூன்று நாடுகளில், இந்தியாவும் ஒன்று. கடந்த 1999-2001 ம் ஆண்டில், 229 மில்லியன் டன்னாக இருந்த இறைச்சி உற்பத்தி, வரும் 2050ம் ஆண்டில், 450 மில்லியன் டன்னாக உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கேரளாவின் தேவை: கேரளாவில், 80 சதவீதம் பேர் இறைச்சியை உண்கின்றனர். அங்கு தினமும், 5,034 டன் இறைச்சி தேவைப்படுகிறது. ஆனால், அங்கு தினமும் வெறும், 264 டன்கள் மட்டுமே இறைச்சி உற்பத்தி செய்யப்படுவதாகவும், மீதமுள்ள 4,780 டன், ஆடு, மாடு, கோழி, பசு உள்ளிட்ட அனைத்து கால்நடைகளும், அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுவதாகவும், கேரள மாநில கால்நடை பராமரிப்புத் துறை கூறியுள்ளது.

கடத்தல்: இதைத் தொடர்ந்து, தமிழகம் மட்டுமில்லாது ஆந்திரா, தென் ஒடிசா, மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, கால் நடைகள், குறிப்பாக மாடுகள், கேரளாவிற்கு கடத்தப்படுவது தொடர்கிறது. வேலூர், புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், மணப்பாறை, பொள்ளாச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு கால்நடை சேகரிப்பு மையங்களில் இருந்து, களியக்காவிளை, செங்கோட்டை, தேனி மற்றும் பொள்ளாச்சி வழியாக, கேரள எல்லைக்குள் இவை கடத்தப்படுகின்றன.

சராசரியாக ஒரு நாளைக்கு, குறைந்த பட்சம் ஒவ்வொரு வாகனங்களிலும், 40க்கும் மேற்பட்ட கால்நடைகள் திணிக்கப்பட்டு 45 வாகனங்களில், அதாவது, 1,800 கால்நடைகள் கேரளாவுக்கு கடத்தப்படுகின்றன. ஒரு வாரத்தில் குறைந்த பட்சம், 9,000 கால்நடைகளும், ஒரு மாதத்திற்கு, 1.8 லட்சம் கால்நடைகளும், இறைச்சிக்காக கடத்தப்படுகின்றன.இது குறித்து, கேரள கால் நடைப் பராமரிப்புத்துறை மூலம், 2009 -10ம் ஆண்டில், பல்வேறு சோதனைச் சாவடிகள் வழியாக,61 லட்சம் கால்நடைகள் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. இதில், 18 லட்சம் கால்நடைகள் சோதனை இன்றி, கொண்டு செல்லப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
நடவடிக்கை எப்போது?:

எஸ்.பி.சி.ஏ எனும் விலங்குகள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்கும், சட்ட ரீதியான அமைப்பிற்கு, வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை போடும் அதிகாரம் உள்ளது. இந்த அதிகாரிகள், துன்புறுத்தப்படும் விலங்குகளை பாதுகாப்பது மட்டுமின்றி, விதிமீறி விலங்குகளை ஏற்றிச் செல்லும் வண்டிகளை பறிமுதல் செய்ய முடியும். பெரும்பாலும் யாரும் அவ்வாறு செய்வதில்லை.தமிழக அரசு கால்நடைக் கடத்தலுக்கு பயன்படுத்தும், லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் பறிமுதல் செய்து, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ராதா ராஜன் தெரிவித்தார்.


No comments: